Thursday, April 28, 2022

படியில் குணத்து பரத நம்பிக்கு

  மலர்: 008



மங்கை அம்மொழி கூறலும், மானவன்
செங்கை கூப்பி , 'நின் காதல் திரு மகன்,
பங்கம் இல் குணத்து எம்பி, பரதனே,
துங்க மா முடி சூடுகின்றான்' என்றான்.  Kamban

பெரியாழ்வார் திருமொழியில் உந்தி பற என்று ராமனையும் கண்ணனையும் மாறி மாறிப் பாடுதல் ஒரு அற்புதமான திரு மொழி . பாடல்கள் எளிமையாக இருப்பதால் விளக்கம் தனியாக சேர்க்க வில்லை .


மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
சீதை மணாளனைப் பாடிப் பற -3- 9-4 –

முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று
அடி நிலை ஈர்ந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற -3- 9-6 –

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற – 3-9- 10-

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.



Sunday, April 24, 2022

ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி

 மலர்: 007


ஒருமுறை திருமங்கையாழ்வார் சோழநாட்டுத் தலமான சிதம்பரம் சென்று மங்களாசாசனம் செய்து, சீர்காழி எல்லையில் நுழையும்போது, அவருடைய தொண்டர்கள் "நாலுகவிப் பெருமாள் வந்தார்" என்று விருதுகூறிச் செல்ல, சைவம் தழைத்தோங்கிய சீர்காழியில் திருஞானசம்பந்தரின் சீடர்கள் "விருது கூறலாகாது" என்று கூறி, திருமங்கையாழ்வாரை திருஞானசம்பந்தரிடம் அழைத்துச் சென்றனர்.

திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வாரிடம் "நாலுகவிப் பெருமாள் என்று கூறப்படுவது உண்மையெனில், ஒரு குறள் பாடும்'' என்றாராம்.

திருமங்கையாழ்வாரும் "ஒரு குறளாய் இருநிலம் மூவடி வேண்டி'' எனத் தொடங்கி பத்துப் பாசுரங்களில் 108 வைணவத் தலங்களுள் ஒன்றான சீர்காழியில் வெண்ணெய் உண்ட தடாளப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்குப் பாசுரமிட்டார்.

இதனால் மகிழ்ந்த திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வாரை "பரகாலன்" என்று அழைத்து, வேல் ஒன்றை பரிசாக அளித்தார்.

ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி
உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக வென மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்
அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும்
காழிச் சீ ராம விண்ணகரே சேர்மின் நீரே—3-4-1-

திருமால் ஒரு குறளனாக, அதாவது, வாமனனாக அவதாரம் எடுத்து வந்தான், இந்தப் பெரிய நிலத்தில் மூன்று அடி மண்ணைத் தரும்படி மாவலியி டம் கேட்டான். விஷயம் புரியாத மாவலியும் அதற்கு ஒப்புக்கொண்டான். உடனே, திருமால் விஸ்வரூபம் எடுத்து, இரண்டு அடிகளால் உலகம் முழுவதையும் அளந்தான், ‘மூன்றாவது அடியைத் தருகஎன்று கேட்டு மாவலியைப் பாதாளத்திற்குத் தள்ளினான். அப்படிப்பட்ட பெருமை உடைய அவனுடைய திருவடிகளை நாம் சென்று சேர்வோம்!

நம்மாழ்வார் தனது திருவாய்மொழியில் த்ரிவிக்ரம அவதாரத்தைப்பற்றி ஒரு அழகான பாசுரம் அருளிச் செய்துள்ளார்:

ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே
 . 4.7.1         

திருவிக்ரமனாக உலகத்தை அளந்த போது சக்கரம், சங்கு, வில் ஆகியவை முதலில் எழுந்தன. திசைகள் எல்லாவற்றினிடமிருந்து மங்களாசாசன சப்தங்கள் எழுந்தன. தண்டும்(கதை), வாளும் அடுத்து எழுந்தன. அண்டங்கள் பிறந்து குமிழ்கள் கிளம்பின. முடியும், பாதமும் ஒரு சேர எழுந்து என்னப்பன் திருவிக்கிரமன் உலகத்தை அளந்தான்.

 வேதாந்த தேசிகர் தம்முடைய தேஹளீச ஸ்துதியில் திரு விக்ரம அவதாரத்தைப்பற்றி ஒரு அருமையான பாடல் பாடியுள்ளார் :

भक्तप्रिय त्वयि तथा परिवर्धमाने
मुक्ता वितान विततिस्तव पूर्वमासीत्।
हारावलिः परमथो रशना कलापः
 तारागणस्तदनु मौक्तिक नुपुर श्रीः॥ 'Dehalisa Stuti'
Bhaktapriya! tvayi tathaa parivardhamaane
Muktaa vitaana vitatistava poorvamaaseet I
Haaraavalih paramatho rashanaa kalaapah
taaraaganastadanu mauktika noopura shreeh II

பாகவதர்களிடம் அன்புவுடையவனே!நீ அன்று திருவிக்ரமனாய் வளரும் போது முதலில் உனக்கு நக்ஷத்திர கூட்டம் முத்துக்களாலான மேற்கட்டின்விரிப்பாக ஆயிற்று , பிறகு முத்து மாலையாக ஆயிற்று. பிறகு ஒட்டியாணமாக ஆயிற்று . அதன் பிறகு முத்துக்களாலாகிய சிலம்பின் அழகை உடையதாயிற்று .

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.